ஊராட்சி தேர்தலில் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக : கூட்டணியில் குழப்பமா?

Must read

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பகுதியில் நடைபெற உள்ள ஊராட்சி தேர்தலில் அதிமுகவை எதிர்த்து பாஜக போட்டியிட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது நடைபெற உள்ள ஊராட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக பிரிந்து தனியாகப் போட்டியிடுகிறது.   ஆனால் அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 22 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் இடங்களில் 2 இடங்கள் காலியாக உள் ளன. அதில் ஒரு இடத்துக்கு (வார்டு எண் 9) தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  இங்கு திமுக சார்பில் பழனிச்சாமி வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.   நேற்று அதிமுக சார்பில் அழகுசுந்தரி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

நேற்று அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக சார்பில் சாந்தர் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.  அவர் கட்சியின் தலைமையின் உத்தரவுப்படி வேட்பு மனு அளித்துள்ளதாக வேட்பாளருடன் வந்திருந்த பாஜக மாவட்ட பொதுச் செயலர் சிவகாமி தெரிவித்துள்ளார்.   அதிமுக கூட்டணியில் குழப்பம் என உள்ளூர் மக்கள் பரபரப்பு அடைந்துள்ளனர்.

More articles

Latest article