சென்னை

ன்று 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்குகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் விவசாயிகளுக்குப் பல திட்டங்கள் வழங்கப்படும் என திமுக அறிவித்தது.   தேர்தலில் வெற்றி  பெற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது.   தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் அரசு பல திட்டங்களை அறிவித்து வருகிறது.

அவ்வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தாண்டில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் முதல் கட்டமாக 25 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 ஆயிரம் புதிய மின் இணைப்புகளுக்கான ஆணையை விவசாயிகளுக்கு வழங்குகிறார். மீதமுள்ள 75000 இலவச மின் இணைப்புக்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.