தேபூர்

பாஜகவினர் தியாகிகளுக்கு மரியாதை அளிப்பதிலும் பாரபட்சம் காட்டுவதாக காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேச கிழக்கு பகுதி பொறுப்பாளராக உள்ளார். அவர் அந்த பகுதி எங்கும் தொடர்ந்து மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உத்திரப் பிரதேச மாநிலம் பதேபூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகேஷ் சசான் என்பவர் போட்டி இடுகிறார். இவருக்கு ஆதரவாக நேற்று பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் நடத்தினார்.

பிரியங்கா தனது பிரசாரத்தில், “ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் விவசாயம், வேலை இன்மை, பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகின்றன. அனால் தேசபக்தி விவகாரம் மட்டும் பெரியதாக்கப்படுகிறது. பாஜகவினர் வெளிநாட்டு வக்கிகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவதை தேசப்பற்று என பாஜகவினர் சொல்லிக் கொள்கின்றனர்.

தேசப்பற்று இல்லாமல் யாராவது இருக்கிறார்களா? எல்லோருக்குமே தேசப்பற்று இருக்கிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவதே தேசப்பற்று ஆகும். தேசப்பற்று உள்ளவர்கள் இந்து மற்றும் முஸ்லிம் என வேற்றுமை பாராமல் அனைவரையும் சமமாக கருத வேண்டும்.

பாஜக மறைந்த தியாகிகளுக்கு மரியாதை அளிப்பதில் கூட பாரபட்சம் காட்டுகிறது. அவர்கள் உண்மையில் தேசப்பற்று உள்ளவர்கள் என்றால் மறைந்த இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி போன்றோர்களுக்கும் மரியாதை அளித்திருக்க வேண்டும்” என கூறினர்.