லக்னோ: கியான்வாபி மசூதி விவகாரத்தை தேர்தல்வரை கொண்டு போக பாஜக பிளான் போட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம்,  வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் வாரணாசி கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து  3 நாட்கள் மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு பணிகள் நடைபெற்றது. அப்போது அங்குள்ள கிணறு ஒன்றில்,  இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் ஆட்கள் நுழைய வாரணாசி கோர்ட்டு தடை விதித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விவகாரம் சர்ச்சையாகி வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கியான்வாபி மசூதி விவகாரத்தை தேர்தல்வரை கொண்டு போக பாஜக பிளான் போட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை பாஜக திட்டமிட்டே செய்து வருவதாகவும், நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. எரிபொருள் விலை உயர்வு, வேலையின்மை போன்றவற்றில் கவனம் செலுத்த பாஜக அரசுக்கு நேரமில்லை. ஆனால், இதுபோன்ற வெறுப்பை பரப்ப ஒரு அட்டவணையே போட்டு வைத்திருக்கின்றனர் என்று விமர்சித்துள்ளார்.