டெல்லி: நாட்டின் 16வது குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்பட 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை பாஜக தலைமை அறிவித்து உள்ளது.

இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக இருக்கும் தற்போதைய ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த்  பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் பெறுவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், பாஜகவுக்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. அதற்காக சரத்பவாரை தேர்வு செய்துள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் இடையே முழுமையான உடன்பாடு எட்டாததால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், போட்டியிட விரும்பவில்லை என்று மறுத்து விட்டார்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் பணியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தகுந்த வேட்பாளரை தேர்வு செய்ய  14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை பாஜக தலைமை அமைத்துள்ளது.

இந்த குழுவுக்கு தலைவராக மத்தியஅமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் நியமிக்கப்பட்டு உள்ளார். உறுப்பினர்களாக மத்தியஅமைச்சர்கள் அஸ்வினி வைஷ்னவ், கிஷன் ரெட்டி மற்றும் தமிழகத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்பட 14 பேர் இடம் பெற்றுள்ளார். வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் (மகிளா மோர்ச்சா) தேசியத் தலைவராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.