இந்தியா முழுவதும் மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் மாதம் 10 ம் தேதி நடைபெற இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.

மொத்தம் 10 மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தானில் தற்போது பா.ஜ.க.வுக்கு ஏழு எம்.பி.க்களும் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று எம்.பி.க்களும் உள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் நீரஜ் தாங்கி ஆகியோர் காங்கிரஸ் சார்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் மாத்தூர், ஹர்ஷ்வர்தன் சிங், ராம் குமார் வர்மா மற்றும் கே.ஜெ. அல்போன்ஸ் ஆகிய நான்கு பேரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அந்த நான்கு இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு 108 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 71 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க. சார்பில் கன்ஷ்யாம் திவாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 13 சுயேட்சை உறுப்பினர்களும், ராஷ்ட்ரிய லோக்தன்திரிக் கட்சிக்கு 3, கம்யூனிஸ்ட் (மா) 2, பாரதிய டிரைபல் கட்சி 2 மற்றும் ராஷ்ட்ரிய லோக்தள் கட்சிக்கு 1 உறுப்பினரும் உள்ளனர்.

41 வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 உறுப்பினர்கள் நிச்சயம் என்ற நிலை உள்ளது அதேபோல் பா.ஜ.க. வுக்கு ஒரு உறுப்பினர் நிச்சயம் என்ற நிலை உள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்றாவது உறுப்பினருக்கு சுயேட்சை மற்றும் இதர கட்சிகளின் 15 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது, பா.ஜ.க.வுக்கு 11 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் இரண்டாவது உறுப்பினர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.

சுயேட்சை மற்றும் இதர கட்சிகளின் ஆதரவை இரண்டு கட்சிகளும் நாடிவந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 11 சுயேட்சைகளின் ஆதரவு உள்ளது தவிர ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி கட்சியைச் சேர்ந்த சுபாஷ் கார்க் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசில் மந்திரி பதவி வகிப்பதால் அவரின் ஆதரவும் உறுதியாகி உள்ளது.

மேலும் மூன்று உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று பா.ஜ.க. ஆதரவுடன் ஜீ தொலைக்காட்சி நிறுவனர் சுபாஷ் சந்திரா சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கம்யூனிஸ்ட் (மா) கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களின் ஆதரவை காங்கிரஸ் கட்சி பெற்றுவிடும் நம்பிக்கை உள்ள நிலையில் ஏற்கனவே ஹரியானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுபாஷ் சந்திரா-வை சுயேட்சை வேட்பாளராக பா.ஜ.க. களமிறக்கி இருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்யும் இரண்டு மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலத்தை சேராத மூன்று பேருக்கு ராஜ்ய சபா சீட்டு கொடுத்தது குறித்து ஏற்கனவே அசோக் கெலாட் உள்ளிட்டோர் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்த நிலையில் பா.ஜ.க.வின் இந்த திடீர் முடிவு அம்மாநில அரசியலில் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

பா.ஜ.க. கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் கன்ஷ்யாம் திவாரி முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின் தீவிர எதிர்ப்பாளர் என்பதால் ராஜ்ய சபா தேர்தலுக்குப் பின் மாநில தலைமையில் மாற்றங்களை செய்ய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

அதேவேளையில், சுயேட்சையாக நிறுத்தப்பட்டிருக்கும் சுபாஷ் சந்திரா-வின் எம்.பி. பதவி வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடைய உள்ள நிலையில் தற்போது ராஜஸ்தானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்து வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.-வுக்கு இது எந்தவகையில் கைகொடுக்கும் என்பதும் கட்சி மாறி ஒட்டு போதாவது யார் என்ற எதிர்பாப்பும் அதிகரித்துள்ளது.