காந்திநகர்:

குஜராத் மாநிலத்தில் சாகுபடிக்கு வரும் மார்ச் 15ம் தேதி முதல் நர்மதா ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது. இதனால் கோடை காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் புறநகரான சவுராஷ்டிரா பகுதிகளில் பாஜக சரிவை சந்தித்துள்ளது. அதோடு மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. நர்மதா ஆற்றின் பெரும்பாலான நீரை தேர்தல் நடக்கும் மத்திய பிரதேச விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் பாஜக அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று குஜராத் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கேதுத் சமாஜ் என்ற விவசாயிகள் அமைப்பின் பொதுச் செயலாளர் சாகர் ராபரி முதல்வர் விஜய் ரூபனிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘கோடை கால சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்ற அறிவிப்பு விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்தார் சரோவர் அணையில் ஏற்பட்ட நீர் பற்றாகுறை தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரம்பி வழிந்த அணையின் நீர் எப்படி பற்றாகுறையானது. அப்படி என்றால் அணையில் இருந்த நீர் என்ன ஆனது?. செப்டம்பர் மாதமே அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அப்போது அணையின் பல பகுதிகள் மூழ்கியிருந்தது.

அப்படி இருந்த சூழ்நிலையில் நீர் எப்படி குறைந்தது?. தங்களது பங்கு நீர் என்ன ஆனது? அது எதற்காக பயன்படுத்தப்பட்டது? என்று அறிந்து கொள்ளும் உரிமை விவசாயிகளுக்கு உள்ளது. தேர்தலுக்கு முன்பு இருந்த தண்ணீர், தேர்தல் முடிந்த பின்னர் எப்படி இல்லாமல் போனது?. சட்டவிரோதமாக தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மாநில அரசு மறுத்துள்ளது. ‘‘தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் சட்டவிரோதமாக வழங்கப்படவில்லை. தொழிற்சாலைகளுக்கும் மார்ச் 15ம் தேதி முதல் தண்ணீர் வழங்கப்பட மாட்டாது’’ என்று தலைமைச் செயலாளர் ஜே.என்.சிங் தெரிவித்துள்ளார்.

எனினும், வியாபம் ஊழல், மாண்டசூர் விவசாயிகள் போராட்டம் போன்ற காரணத்தால் மத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் தலைமையிலனா பாஜக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால் தேர்தலை மனதில் வைத்து விவசாய திட்டங்களை அதிகளவில் சிவ்ராஜ் சிங் அறிவித்து வருகிறார். மேலும், கோடை காலத்தின் அங்கு கடும் வறட்சி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் அப்போது வானிலை நன்றாக இருக்கும் என்று பாஜக கருதுகிறது.

அதனால், மத்திய பிரதேச தேர்தலை கணக்கிட்டு தான் நர்மதா ஆற்று நீரை அங்கு விவசாயத்திற்கு அதிக அளவில் பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அங்கு தேர்தல் முடிந்த பிறகு லோக்சபா தேர்தலின் போது ஆதாயம் அடையும் வகையில் குஜராத் மக்கள் தாகம் தீர்த்துக் கொள்ளலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.