பெங்களூரு:

ர்நாடக தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜேடிஎஸ் கட்சி தலைவர் குமாரசாமி பாஜ ரூ.100 கோடி தருவதாக தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசுகிறது என்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ள நிலையில், மாநில கவர்னர் வஜுபாய் வாலா ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறார்.

இதன் காரணமாக 104 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ள பாரதியஜனதா, பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை நிரப்ப தேவைப்படும் 9 சட்டமன்ற உறுப்பினர்களை  மாற்றுக்கட்சிகளிடையே இருந்து இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டமன்ற கட்சி தலைவராக குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, பாஜ மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை வீசினார்.

அப்போது,  தங்களுடைய கூட்டணி காங்கிரசுடன் மட்டுமே என்று உறுதிபட தெரிவித்த குமாரசாமி, ஜேடிஎஸ் ஆதரவு கேட்டு  பாஜ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தன்னை  சந்தித்ததாக  வந்த தகவல்கள் தவறு என்று மறுத்தார்.

ம.ஜ.தவின் எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறது என்றும், ஆனால், தனது கட்சி எம்எல்ஏக்கள் யாரும் அணி மாறமாட்டார்கள் என்றும் உறுதிப்பட கூறினார்.

கருப்பு பணத்தை ஒழிப்பதை பற்றி தொடர்ந்த பேசி வரும் மோடி, தனது கட்சி எம்எல்ஏக்களிடம், ரூ.100 கோடி பணத்தையும்  பதவிகளை யும் தர உள்ளதாக பேரம் பேசுகிறது.. பாஜகவுக்கு  இந்த 100 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது?” என கேள்வியெழுப்பினார்.

மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏக்களுக்கு கொடுக்க தேவையான பணம் பாஜவிடம் இருக்கும்போது, மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாக அறிவித்தது என்னவாயிற்று என கேள்வி விடுத்தார். மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.