டில்லி

புல்வாமா மற்றும் பாலகோட் விவகாரத்தை மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இருந்து பாஜக நீக்கி உள்ளது.

கடந்த மாதம் 14 ஆம் தேதி அன்று புல்வாமாவில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர்.    அதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாலகோட்டில் அமைந்துள்ள ஜெய்ஷ் ஈ முகமது முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது.

அதன் பிறகு பாகிஸ்தான் விமானபடையை துரத்திச் சென்ற இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டு உலக நாடுகள் அழுத்தத்தால் விடுவிக்கப்பட்டார்.   பாலகோட் தாக்குதல் நடந்த உடன் பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் இதை பாஜக தனது தேர்தல் ஆதாயத்துக்கு பயன்படுத்தும் என செய்திகள் வெளியிட்டன.

அதைப் போலவே நடைபெற உள்ள மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ராமர் கோவில் விவகாரம் பின் தள்ளப்பட்டு பாலகோட் தாக்குதலும் அபிநந்தன் விடுதலையும் முன்னணிக்கு வந்தது.    வட இந்தியாவில் அபிநந்தன் புகைப்படத்துடன் பாஜக தேர்தல் சுவரொட்டிகளும் பானர்களும் அமைக்கப்பட்டன.

ஆனால் இந்த விவகாரங்கள் பொதுமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது.  அதனால் பாஜகவின் மூத்த தலைவர்கள் இந்த ராணுவ தாக்குதல் விவகாரங்களை பிரசாரத்தில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர்.   அபிநந்தன் புகைப்படம் கொண்ட பானர்கள் நீக்கப்பட்டுள்ளன.

எனவே தற்போது பாஜவின் தேர்தல் பிரசாரத்தில் அரசு அறிவித்துள்ள ஆயுஷ்மான் காப்பிட்டு திட்டம்,  விவசாய நிதி உதவி போன்றவைகளை கையில் எடுத்துள்ளன   அத்துடன் கடந்த 1999 ஆம் வருடம் கார்கில் போரை முன்னிறுத்தி பிரசாரம் செய்த பாஜக அப்போது தோல்வி அடைந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தேர்தல் ஆணையம் எந்த ஒரு கட்சியும் ராணுவ நடவடிக்கைகள், ராணுவ வீரர்களின் புகைப்படங்கள், ராணுவ சீருடைகளை தேர்தல் பிரசாரத்தில் பயன் படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.    அத்துடன் நேற்று மாலை முதல் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.   இந்நிலையில் தேர்தல் ஆணையத்தை மீற முடியாத நிலையில் பாஜக உள்ளதால் இந்த ராணுவ விவகாரங்கள் பிரசாரத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் ஏற்கனவே “காவலரே திருடன் ஆனார்” என்னும் பிரசார கோஷத்தை பாஜகவுக்கு எதிராக நடத்த தொடங்கி உள்ளது.   அதை முறியடிக்கும் வகையில் பாஜகவுக்கு சரியான பிரசார கோஷம் இன்னும் கிடைக்காததால் பாஜக தலைமை சிறிது யோசனையில் ஆழ்ந்துள்ளதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.