போபால்,
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள விதிஷா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.
இவரை காணவில்லை என்று அவரது தொகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சுஷ்மா சுவராஜ் மோடி தலைமையிலான பாரதியஜனதா அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் பாராளுமன்ற தொகுதிகளில் ‘காணவில்லை’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில் தற்போது சுஷ்மாவையும் காணவில்லை என்று போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுஷ்மாவின் தொகுதியான விதிஷாவில், நகரம் முழுவதும், ’எங்கள் தொகுதி எம்.பி.யை காணவில்லை’ என்றும், ’காணாமல் போன எம்.பி.யை தேடி வருகிறோம்’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டர்களில், ’விதிஷாவில் உள்ள விவசாயிகள் செத்து மடிகிறார்கள், விவசாயிகள் கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் எங்கள் தொகுதி எம்.பி.யை காணவில்லை. அவரை யாராவது பார்த்தால், விதிஷா மக்கள் அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாக சொல்லுங்கள்’ என குறிப்பிட்டுள்ளது.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.