1
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.  உள்ளிட்ட பல கட்சிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், “நமமை மாற்றிவிடுவார்களோ” என தலைமையை நினைத்து தினம் தினம் பயந்துகொண்டே இருந்தார்கள். வேட்புமனு வாபஸ் பெறும் நாள் முடிந்தவுடன்தான் அவர்கள் முகத்தில் நிம்மதி தெரிந்தது.
ஆனால் அதற்கு நேர்மாறா, “எந்த வேட்பாளர் எப்போது அப்ஸ்காண்ட் ஆவாரோ” என்று தலைமை பயந்துகொண்டே இருக்கும் நிலை பாஜகவில் நிலவுகிறது.
இதற்கு முதல் உதாரணம் பென்னாகரம் கந்தசாமி. பாஜகவின் நீண்ட நாள் உறுப்பினரான இவருக்கு பென்னாகரத்தில் போட்டியிட வாய்ப்பளித்தார், மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கினார் கந்தசாமி.  ஆனால் வேட்புமனு தாக்கல் செய்தபோது, ‘உங்கள் மீது குற்றவழக்கு இருக்கிறதா? இல்லையா?’ என்ற  கேள்விக்குப் பதில் சொல்லாமல் விட்டதால் இவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.  சரி இவர்தான் இப்படி என்றால், மாற்று வேட்பாளராவது சரியாக வேட்புமனு தாக்கல் செய்திருக்கலாம் அல்லவா…. அவரும் கோளாறு கொடுக்க.. அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.
இது குறித்து லோக்கல் பாஜகவினர், “வேட்புமனுவில் வேண்டுமென்றே தவறு செய்து, வேட்பாளரும் மாற்று வேட்பாளரும் போட்டியிலிருந்து விலகிவிட்டனர். இதற்கு மாம்பழ கட்சியில் இருந்து கணிசமான பலன் கிடைத்திருக்கிறது” என்கிறார்கள்.
இதே புகாராக, கட்சித் தலைமைக்குப் போக,  அவரைக் கட்சியில் இருந்தே நீக்கியிருக்கிறார்  தமிழிசை.
இதற்கிடையே, , மடத்துக்குளம் பா.ஜ.க வேட்பாளர் முத்துக்குமார்  தன் வேலையை காட்டினார்.   தஞ்சாவூரில் ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில், கட்சிக்காரர்களோடு அவரும் அ.தி.மு.கவில் ஐக்கியமாகிவிட்டார். இதற்கான பலன் யார் மூலம் கிடைத்திருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.
இந்த இருவரைப்போல இன்னும் பல பாஜக வேட்பாளர்கள், அணி மாறவோ அப்ஸ்காண்ட் ஆகவோ தயாராக இருப்பதாகவும் தகவல் பரவி பாஜக வட்டாரத்தை கதிகலங்க வைத்திருக்கிறது.
இப்படி நடப்பதற்கு, மூல காரணம் கட்சியின் மாநில தலைமைதான் என்று குற்றம் சாட்டுகிறார்கள் பாஜகவினர் சிலர்.
“வெளிப்படையாக தெரிந்தவர்கள் இந்த இரு வேட்பாளர்கள். ஆனால் பல தொகுகளில், எதிர் முகாமிடம் சரண்டராகி, சைலண்ட் ஆகிவிட்டார்கள். இதற்குக் காரணம் மாநில நிர்வாகிகளும், தலைமையும்தான். மத்தியில் ஆட்சியில் இருந்து தமிழகத்தில் செல்வாக்குள்ள கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாநில தலைமையால் முடியவில்லை. சரி போகட்டும். நமது நிலை அறிந்து, செல்வாக்குள்ள குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட்டிருக்கலாம். சிறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவதால்தான் இந்த பிரச்சினை.
குறைந்தபட்சம், கட்சியில் உண்மையிலேயே தீவிரமாக செயல்படுபவர்களை கணித்து சீட் கொடுத்திருக்க வேண்டும். அவர்கள்தான் கட்சி மானத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவாவது கடைசிவரை போராடியிருப்பார்கள்.
மேலும் கட்சியை வளர்க்கும் செயலை மாநில தலைமையோ, நிர்வாகிகளோ செய்வதில்லை. இவர்கள் தங்களுக்குள நடத்திக்கொள்ளும் உள் பாலிடிக்ஸில்தான் கவனமாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், விஐபிகளை கட்சியில் சேர்த்தால் கட்சி பலம் அதிகரிக்கும் என தவறாக கணக்குப்போடுகிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் கங்கை அமரன், காயத்ரி ரகுராம், குட்டி பத்மினி போன்ற சினிமா விஐபிகளை பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷா முன்னிலையில் சேர்த்தார்கள். அவர்களால் எந்த பயனும் கட்சிக்கு இல்லை”  என்று குமுறுகிறார்கள்.
பா.ஜ.க. வேட்பாளர்கள் சைலண்டா ஆவது இது முதல் முறை அல்ல.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குருமூர்த்தி, ஆவணங்களை உரிய நேரத்தில் வழங்காத காரணத்தால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.