அரியலூர்,

நீட் தேர்வு காரணமாக, 1176 மதிப்பெண் பெற்ற தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தமிழகத்தில் மாணவர்களின் உரிமை வலுப்பெற்று வருகிறது.

தமிழகத்திற்கு  நீட்தேர்வில் இருந்து விலக்கு கோரியும், மறைந்த அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம்  நடைபெற்று வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நீட் தேர்வுக்கு ஆதரவாக  பேசி சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார்.

அவரது பேச்சுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,  மாணவி அனிதாவின் சாவில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் நேரடியாகவோ, மறைமுகமாவோ சம்பந்தப்பட்டு இருப்பதாக அறிக்கை வெளியிட்டார்.

மேலும் அனிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார். மேலும் டில்லி சென்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து மனு கொடுத்தார்.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் டாக்டர் கிருஷ்ணசாமியின் அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது,

எங்களுக்கு உதவி செய்த தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் மற்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு மீது புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேவையில்லாமல் அவதூறான தகவல்களை பரப்பி வருகிறார்.  அவருடைய குற்றச்சாட்டு உண்மையல்ல.

எங்கள் வீட்டில் என்ன நடந்தது என்பதை கிருஷ்ணசாமி நேரடியாக பார்த்தது கிடையாது. அது பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ஆனால் தெரிந்ததுபோல் பேசிக்கொண்டிருக்கிறார். தயவு செய்து அவர்  அவ்வாறு அவர் பேசக்கூடாது.

காவிக்கு பின்னால் இருக்கிறோம் என்ற தைரியத்தில் அவர் பேசி கொண்டிருக்கிறார். எங்களை பற்றியும், எங்கள் குடும்பத்தை பற்றியும் தெரியாமல் அவர் பேசக்கூடாது. எங்களுக்கு உதவிய வர்களை அவதூறாக பேசக்கூடாது.

ஏற்கனவே நாங்கள் கஷ்டத்தில் உள்ளோம். இதுபோல் பேசுவதால் மேலும் கஷ்டமாக உள்ளது. உண்மையான நிலவரம் தெரியாமல் ஆதாரம் இல்லாமல் தன்னிச்சையாக டாக்டர் கிருஷ்ணசாமி பேசி வருகிறார்.

அவரை பற்றி தனிப்பட்ட முறையில் எதையும் சொல்ல நான் விரும்பவில்லை. ஒரு காலத்தில் அவரை அண்ணனாக நினைத்துள்ளேன். எனவே எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது போல் அவர் நடந்து கொள்ளக்கூடாது.

அனிதாவின் இறப்பு மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் உணர்வுள்ள அனைவரும் இணைந்து போராடி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.