திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசுப் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு பாஜக – இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் இடையே அடிதடி சண்டை நிகழ்ந்தது.

இருதரப்பிற்கும் முன்விரோதம் இருந்துவந்த நிலையில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றி மோதலாக மாறிய நிலையில் தாராபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்பாக பாஜக – இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கட்டை கம்பிகளைக் கொண்டு தாக்கிக்கொண்டனர்.

இருதரப்பும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் அவரது உதவியாளர் சங்கர் மற்றும் பாஜக-வைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி ஆகியோருக்கு மண்டை உடைந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாஜக முன்னாள் மாவட்ட பொருளாளர் கொங்கு ரமேஷ் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.