டில்லி

பாஜகவின் கூட்டணிக் கட்சியான அகாலி தளம் கட்சி காஷ்மீர் மக்களவை உறுப்பினர் ஃபரூக் அப்துல்லாவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370 ஐ விலக்கி அம்மாநிலத்துக்கு அளித்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. அத்துடன் அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.   அப்போது முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இவர்களில் தற்போதைய மக்களவை உறுப்பினரான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபருக் அப்துல்லாவும் ஒருவர் ஆவார்.     இவருடைய காவல் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.   இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் முதல் நாளை முன்னிட்டு பாஜக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம்  பெற்றுள்ள சிரோமணி அகாலி தளம் கட்சியின் மக்களவை உறுப்பினர் பல்வீந்தர் சிங் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இந்த கூட்டத்தில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேட்டுக்கு அகாலி தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.    பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் லலன்சிங் குடிமக்கள் பட்டியல் கட்டாயம் இல்லை எனத் தெரிவிக்கும் போது அதை ஏன் கை விட மத்திய அரசு மறுக்கிறது எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.