புனே: மராட்டிய மாநிலத்தில், மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியரகங்களின் ஆடிட்டர்கள், கோவிட்-19 நோயாளிகளுக்கு வழங்கப்படும் கட்டண ரசீதுகளை ஆடிட்டிங் செய்வதற்காக, கொரோனா சிகிச்சையளிக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பணியமர்த்தப்படவுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற புகாரை தடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.2 லட்சத்திற்கு அதிகமாக வழங்கப்படும் கட்டண ரசீதுகள் ஆடிட் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த 3 மாதங்களாக, கொரோனா நோயாளிகளிடம், சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் அதிகளவு கட்டணம் வசூலிக்கின்றன என்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த விஷயம் சமூக வலைதளங்களிலும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்தப் புதிய நடைமுறையின்மூலம், கொரோனா சிகிச்சை தொடர்பான பில்கள், நோயாளிகளின் கைகளுக்குச் செல்லும் முன்னரே, அவை ஆடிட்டரால் சரிபார்க்கப்படும்.