“சும்மா இருக்க மாட்டேன்’’  உத்தவ்க்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை..

ஊரடங்கு காலத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் மின்சார கட்டணம், மிக அதிக அளவில் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அங்குள்ள பிரபலங்கள் மனதுக்குள் குமைந்து கொண்டிருக்க, சில சினிமா நட்சத்திரங்கள் டிவிட்டரில்  புலம்பி ஆற்றாமையைத் தணித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரேயை கண்டிக்க அவர்களுக்குப் பயம்.

ஆனால் உத்தவ் தாக்கரேயின் ரத்த சொந்தமான ராஜ் தாக்கரே, மின் கட்டண உயர்வைக் கண்டித்திருப்பதோடு, எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

நவ நிர்மான் கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே இது குறித்து உத்தவ் தாக்கரேக்கு,எழுதியுள்ள கடிதத்தில்,’’ கொரோனா மீதான அச்சத்தாலும், வேலை இல்லாத விரக்தியிலும் மக்கள் பரிதவிக்கும் சூழலில் அநியாயமாக மின் கட்டணம் வசூலிப்பது குடிமக்களைக் கொள்ளை அடிப்பதற்கு ஒப்பானது’ என்று ‘தடித்த’ வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளார்.

’’பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது உண்மை தான். அதற்காக மக்கள் மீது சுமை ஏற்றும் தருணமா இது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ள ராஜ் தாக்கரே’’ இதை எல்லாம் பார்த்துக்கொண்டு மக்களோ அல்லது எங்கள் கட்சியோ சும்மா இருப்பார்கள் என்று கருத வேண்டாம்’’ என்றும் முதல்வரை எச்சரித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே பிறந்த நாள் கொண்டாடிய மறுநாள், அவருக்கு இந்த கடிதத்தை ராஜ் தாக்கரே ‘’பரிசாக’’ அனுப்பியுள்ளார்.

-பா.பாரதி.