புதுடெல்லி: புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளின் அமைப்பு ஒன்று, காஷ்மீரில் 370ம் சட்டப்பிரிவு மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், அதன் மாநில அந்தஸ்து திரும்பவும் வழங்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளது.
நல்லிணக்கம், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு என்று அழைக்கப்படும் அந்த பண்டிட்டுகள் அமைப்புதான் இந்த ஆச்சர்யகரமான கோரிக்கையை முன்வைத்துள்ளது. கடந்தாண்டு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதற்கு முன்னதாக இத்தகைய கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்தை உடனடியாக திரும்ப வழங்க வேண்டும். தனிநபர்கள், சமூகங்கள், மதங்கள், பிராந்தியங்கள் மற்றும் அனைத்து சமூக மற்றும் அரசியல் நிறுவனங்களுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டமானது சமத்துவ உரிமையை உறுதிசெய்துள்ளது.
மதம், சாதி, பிராந்தியம் மற்றும் இதர அம்சங்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுதல் கூடாது என்று இந்த சமத்துவ உரிமை வலியுறுத்துகிறது. இதற்கு முன்னர், எப்போதுமே அந்த மாநிலம் சிறுமைப்படுத்தப்படவில்லை.
அரசியல் பிரச்சினைக்கு ராணுவத் தீர்வை காண முடியாது மற்றும் தன் சொந்த மக்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்த முடியாது. பிரதமரே, உள்துறை அமைச்சரே, காஷ்மீரிகள் உங்கள் மக்கள். அவர்களிடம் அன்பு காட்டுங்கள்” என்று அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.