வாஷிங்டன்

குறைந்த விலையில் உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் இந்திய  நிறுவனங்களை உலக செல்வந்தர் பில்கேட்ஸ் பாராட்டி உள்ளார்.

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியவருமான பில்கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம் பல நற்பணிகளைச் செய்து வருகிறார்.   இவர் உலகெங்கும் கொரோனா தடுப்புப் பனிகளுக்காக பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.  இவர் இந்தியா அமெரிக்கா இடையே நடந்த சுகாதார உறவு குறித்த காணொளி கருத்தரங்கில் கலந்து கொண்டர்.

அவர் அப்போது தனது உரையில் 

”இந்திய நிறுவனங்கள் 100 நாடுகளுக்கு 15 கோடி தடுப்பூசி மருந்துகளை கடந்த ஆண்டு வரையிலான காலத்தில் ஏற்றுமதி செய்துள்ளன. இதனால் குழந்தை உயிரிழப்புக்குக் காரணமாக அமையும் நிமோனியா மற்றும் ரோட்டா வைரஸ் நோய்களுக்கான தடுப்பூசியை உலகம் முழுவதும் இலவசமாக அளிக்க அந்தந்த நாட்டு அரசுகள் முன்வந்துள்ளன.

கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக முடிவடையாத சூழலில் இதையும் தாண்டி அவசரகால நடவடிக்கையாக உலகம் முழுவதும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.  இந்திய பிரதமர் அறிவியல் தொழில்நுட்பம் மூலமாக உலகை அச்சுறுத்தும் நோய்களிலிருந்து மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று சுட்டிக் காட்டியதை நினைவுகூர்கிறேன்.

இந்திய தயாரிப்பான கோவாக்ஸின், கோர்பாவேக்ஸ், கோவிஷீல்டு ஆகிய மூன்று தடுப்பூசி மருந்துகள் எல்லைகடந்த பிணைப்பை உருவாக்கியுள்ளன.  இப்போது உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்றின் தீவிரம் பெருமளவு குறைந்துள்ளது.   ஆயினும் அடுத்த பெருந்தொற்று உருவாவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.  எனவே உலக நாடுகளின் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.”

எனத் தெரிவித்துள்ளார்.