சென்னை: தமிழக தலைநகரில் பைக் டாக்ஸி இயக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தாலும், பைக் டாக்ஸி சேவை சென்னையில் சட்டவிரோதமாக தொடரவே செய்கிறது என்கின்றன தகவல்கள்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ரேபிடோ என்ற நிறுவனத்தின் பைக் டாக்ஸி சேவைக்கு தடைவிதித்து ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தார்.

முறையான மற்றும் பொருத்தமான விதிமுறைகள் வகுக்கப்படும் வரை அந்த சேவையை வழங்கக்கூடாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, ரேபிடோ நிறுவனம் மீண்டும் சென்னையில் தனது பைக் டாக்ஸி சேவையை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக ரேபிடோ இணை நிறுவனர் அரவிந்த் சங்காவிடம் கேட்டபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இதுவரை, 175 இருசக்கர வாகனங்களுக்கு விதிமுறை மீறலுக்காக ரூ.2000 முதல் ரூ.4000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையின் கணக்கு மட்டும் 96.

சில மாநிலங்களைப் போன்று, தமிழகத்தில் இருசக்கர வாகனங்களுக்கான போக்குவரத்து வகைப்பாட்டு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால், இருசக்கர வாகனத்தை வணிகப் பயன்பாட்டு வாகனமாக இங்கே பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.