பாட்னா: சாதிவாரி மக்‍கள்தொகை கணக்‍கெடுப்பு காலத்தின் கட்டாயம், இது பின்தங்கிய நிலைகளில் உள்ள சாதியினை அடையாள காண உதவும் என மத்திய பாஜக அரசின் அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர்  நிதிஷ்குமார், மாநிலத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

நாடு முழுவதும் தழுவிய அளவிலான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதனால், பாஜக அரசுமீது கூட்டணி கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று குரல்கொடுத்து வரும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மோடி அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து செய்தியளார்களை சந்தித்த  நிதிஷ்குமார், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நாட்டின் நலனுக்கானது என்றும், பின்தங்கிய நிலைகளில் உள்ள சாதியினை அடையாள காண உதவும், அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க முடியும். இதனால், சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான முடிவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக  பீகாரில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி,   எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இந்திய ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஓரணியில் திரள வேண்டும் என, பாஜக அல்லாத முதலமைச்சர்கள் உள்பட 33 தலைவர்களுக்கு பீகார் எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்பதற்கு, ஒரு தார்மீக காரணத்தையாவது இந்திய ஒன்றிய அரசு தெரிவிக்க முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.