பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், இந்த தேர்தலில் தங்களுக்கு ஜெயிக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதும் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், ’’குறிப்பிட்ட காலத்தில் தேர்தலை நடத்தியே தீர வேண்டும்’’ என ஒற்றைக்காலில் நிற்கிறது.


ஆனால் அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராம்விலாஸ் பஸ்வானின் ’லோக்ஜனசக்தி’ கட்சி தேர்தலை இப்போது நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இது குறித்து அந்த கட்சி தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘’ பீகாரில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. வரும் அக்டோபர் மாதம் கொரோனா தாக்கம் மிகக்கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மக்கள் உயிரே முக்கியம். எனவே இப்போது தேர்தல் நடத்தக்கூடாது’’ என்று வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் தான் பா.ஜ.க.வும் இடம் பெற்றுள்ளது.
அந்த கட்சியின் நிலைப்பாடு என்ன?
பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றால் , மீண்டும் நிதீஷ்குமார் தான் முதல்-அமைச்சர் என பா.ஜ.க. அறிவித்து விட்டது.
இதனால் பீகார் தேர்தலில் அந்த கட்சிக்கு அக்கறை கிடையாது.
‘’ தேர்தல் நடந்தாலும் சரி.. நடக்கவில்லை என்றாலும் சரி’’ என்ற மன நிலையில் உள்ள பா.ஜ.க.’’ பீகாரில் தேர்தல் தேதியை முடிவு செய்யும் உரிமை தேர்தல் ஆணையத்துக்குதான் உள்ளது ‘’ என பட்டும் படாமலும் கருத்து தெரிவித்து ஒதுங்கி கொண்டது.
-பா.பாரதி.