சேலம்: பிரபலமான சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்ய மத்தியஅரசு முயற்சித்து வந்த நிலையில், அதை வாங்க தனியார் நிறுவனங்கள் ஏதும் முன்வராத நிலையில், அதன் விற்பனையை கைவிட மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின், ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியாவின்(செயில்) கட்டுப்பாட்டில் சேலம் உருக்காலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை மத்தியஅரசு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் , சேலம் எஃகு மற்றும் அலாய் ஸ்டீல் ஆலை உட்பட எஃகு நிறுவனத்தின் மூன்று சிறப்பு எஃகு உற்பத்தி அலகுகளில் 100% பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நடப்பு நிதியாண்டிலேயே அதன் மூலோபாய முதலீட்டுத் திட்டத்திற்கு உந்துதலைக் கொடுக்க  மத்திய அரசாங்கம் முடிவு செய்தது. இதற்கு தமிழ்நாடு உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும், எதிர்ப்புகளை மீறி தனியாருக்கு தாரை வார்ப்பதில் மத்தியஅரசு முனைப்பு காட்டி வந்தது.

முன்னதாக, சேலம் உருக்காலை, துர்காபூர் அலாய்ஸ் இரும்பு ஆலை, பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு ஆலை ஆகிய மூன்றையும் தனியார் மயமாக்கிட பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி,கடந்த 2018ல் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அதை ஏலம் விடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு 2019ம் ஆண்டில் ஏலம் விட்டது. சேலம்  2019ல் சர்வதேச டெண்டர் விடப்பட்டது. ஆனால், இந்த ஆலைகளை  ஏலம் கேட்டவர்கள் பரிவர்த்தனையை தொடர ஆர்வம் காட்டாததால் கடந்த 2019ல் துர்காபூர் ஆலையை தனியார் மயமாக்கும் திட்டத்தை அரசு நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில், ஏலம் கேட்ட நிறுவனங்கள் தொடர்ந்து, அதுதொடர்பான  பரிவர்த்தனையை தொடர அவர்கள் ஆர்வம் காட்டாததால், சேலம் இரும்பாலை விற்பனையை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு  அறிவித்துள்ளது.

பொதுதுறை பங்குகள் விற்பனை மூலம் ரூ.51,000 கோடியை திரட்ட அரசு திட்டமிட்டிருந்தது. இதுவரை, ரூ.10,052 கோடி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேலம் உருக்காலை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.