பவானி ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகளைக் கட்டி, தமிழக்ததுக்கு வரும் நீரைத் தடுக்கும் சதியில் கேரளா தீவிரமாக இறங்கியுள்ளது. கேரளாவின் இந்த நவடிக்கை தமிழக அரசுக்குத் தெரியுமா, ஏதேனும் நடவடிககை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேரள மாநிலம் தேக்குவட்டை என்னும் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே  ஆறு புதிய தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது இதன் மூலம்,  தமிழகத்துக்கு வரும் தண்ணீரை, கேரளாவுக்குள் திருப்பி விடுவதுதான் கேரளாவின் திட்டம்.
காவிரியின் கிளை ஆறான பவானி, தமிழகத்தின், நீலகிரியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், அப்பர் பவானி மலைப்பகுதியில் உற்பத்தியாகிறது.  உற்பத்தியாகும் சிறிது துாரத்திலேயே, கேரள வனப்பகுதிக்குள் பவானி ஆறு நுழைந்து விடுகிறது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாக பாயும் இந்த ஆறு,  முக்காலி என்னும் இடத்தில், கிழக்கு நோக்கி திரும்பி, மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது.

பில்லுார் அணையை நிறைக்கும் பவானி தண்ணீர் தான், கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட, பல்வேறு நகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான  மக்களின் தாகத்தைத் தீர்க்கிறது. அதோடு, , கீழ்பவானி வாய்க்கால் வழியாக, பல லட்சம் ஏக்கர் பரப்புக்கு, பாசன வசதியையும் பவானியே அளித்து வருகிறது.

பவானியின் குறுக்கே, முக்காலியில் அணை கட்டி, ஆற்றின் போக்கை மாற்றி  பாரதப்புழாவுக்குத் திருப்பி விடுவதற்கு, கேரள அரசு தொடர்ந்து முயற்சி செய்து  வருகிறது. கடந்த, 2002ல், இறுதியில், இந்த முயற்சியை கேரளா எடுத்த போது, கீழ்பவானி விவசாயிகள் உட்பட, பல்லாயிரக்கணக்கானோர், தமிழக -கேரள எல்லை நோக்கி, வாகனங்களில்  சென்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரள காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதை் தொடர்ந்து, அணை கட்டும் திட்டத்தை, கேரள அரசு கைவிட்டது.

பிறகு 14 ஆண்டுகளாக அமைதியா இருந்தது கேரள அரசு.  தமிழகத்தில், கடந்த ஆண்டில், இரு பருவமழைகளும் பொய்த்துப் போனதால்,  சிறுவாணி அணை வற்றிப்போனது.  இருக்கும் நீரையும் உறிஞ்சி கிணறுக்கும் கீழாக நீர்மட்டம் சென்று விட்டது. அப்போது, அதற்கு வரும் கால்வாய் தண்ணீரையும், மண்ணைப் போட்டு கேரள அரசு தடுத்து விட்டது.

இதனால்  கோவை நகரில் வசிக்கும் இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு, பில்லுார் அணையில் இருந்து வரும் பவானி தண்ணீரே, ஒரே ஆறுதலாக இருந்துவருகிறது. இந்த நிலையில்,  தமிழகத்திற்குள் வரும் பவானி ஆற்றுத் தண்ணீரையும்,முற்றிலுமாக தடுக்கும் வகையில், அட்டப்பாடி பள்ளத்தாக்கில், வரிசையாக ஆறு தடுப்பணைகளைக் கட்டுவதற்கு, கேரள அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில், தாவளத்திலிருந்து கீரக்கடவுக்கு இடைப்பட்ட பகுதியில், தேக்குவட்டை மற்றும் மஞ்சகண்டி ஆகிய இரு இடங்களில், இரண்டு தடுப்பணைகள் கட்டும் பணி, கடந்த பத்து நாட்களாக  நடந்து வருகிறது.

பவானி ஆற்றில் தண்ணீர் வரத்தே இல்லாத நிலையில், சாலையோரத்தில் ஜல்லிகளைக் கொட்டி, ஆற்றுக்குள், ஜே.சி.பி., இயந்திர உதவியுடன், தடுப்பணை கட்டும் பணி நடந்துகொண்டிருக்கிறது.

அடுத்தகட்டமாக, நான்கு இடங்களிலும் தடுப்பணை கட்டவும், கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக  சொல்லப்படுகிறது. . ஒருவேளை, இந்த தடுப்பணைகள் அனைத்தும் கட்டப்பட்டால், தமிழகத்துக்கு வரும் பவானியின் நீர்வரத்து முற்றிலும் குறையும். பில்லுார் அணையும் சிறுவாணி போல வறண்டு விடும்.

கேரளாவின் இந்த செயல் குறித்து தமிழக அரசுக்குத் தெரியுமா, ஏதேனும் நடவிடக்கை எடுக்குமா என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.