தாரா

பாரதி தமிழ்ப்பட நாயகன் சாயாஜி ஷிண்டே கடும் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாயாஜி ஷிண்டே மராத்தி பட உலகில் பிரபலமான நடிகராக இருந்து வருவதுடன் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிப் படத்தில் நடித்து உள்ளார். குறிப்பாகத் தமிழில் ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘அழகி’, ‘பாபா’, ‘வேலாயுதம்’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘வேட்டைக்காரன்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமான சாயாஜி ஷிண்டே. வில்லன், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

முதலில் ஐஏஎஸ் அதிகாரி ஞான ராஜசேகரன் இயக்கிய ‘பாரதி’ திரைப்படத்தில் சுப்பிரமணிய பாரதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சாயாஜி ஷிண்டே.  இந்த திரைப்படத்தில் பாரதியாராக மிக அற்புதமான நடிப்பை சாயாஜி ஷிண்டே வழங்கியதால் திரையுலகினரால் பாராட்டப்பட்டார்.

சாயாஜி ஷிண்டே, நாடக நடிகராக இருந்து திரையுலகில் நுழைந்தவர் ஆவார். சாயாஜி ஷிண்டே கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று வீட்டில் இருந்த சாயாஜி ஷிண்டேவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. எனவே அவரை, குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சதாராவில் உள்ள மருத்துவமனையில் சாயாஜி ஷிண்டே சிகிச்சை பெற்று வருகிறார். சாயாஜி ஷிண்டேவின் இதயக்குழாய்களில் ஒன்று 99 சதவீதம் அடைப்பட்டு விட்டதால் அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.