தசரா காரணமாக இரண்டு நாள் ஓய்வுக்குப் பின் இந்திய ஒற்றுமை பயணம் கர்நாடகாவில் இன்று மீண்டும் துவங்கியது.

கர்நாடக மாநில பாண்டவபுரா தாலுகாவில் உள்ள பெல்லாலே கிராமத்தில் இன்று காலை துவங்கிய நடைபயணம் மதியம் நன்மங்களா தாலுகாவில் உள்ள சவுடேனஹள்ளி கேட் அருகே நிறுத்தப்பட்டது.

மாலை மீண்டும் துவங்கிய யாத்திரை இரவு ப்ரம்மதேவரஹள்ளி கிராமத்தில் நிறைவடைந்தது.

இன்றைய யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார்.

இன்று காலை நடைபெற்ற பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் கலந்து கொண்ட சோனியா காந்தியை காண ஏராளமான மக்கள் திரண்டனர்.

தன்னுடன் சற்று நேரம் நடந்து வந்த சோனியா காந்தியை சிறிது தூரம் சென்றதும் அவரது உடல்நிலை கருதி திரும்பசெல்லுமாறு வழியனுப்பி வைத்தார் ராகுல் காந்தி.

அப்போது கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

கர்நாடகாவில் இருந்து சோனியா காந்தி டெல்லி செல்லும் அதேவேளையில், ப்ரியங்கா காந்தி மைசூர் வருவதை ஒட்டி அவர்களுடன் டி.கே. சிவகுமார் சென்றார்

மாலையில் யாத்திரை மீண்டும் துவங்கியபோது சித்தராமைய்யா ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டார்.

அப்போது காங்கிரஸ் கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் ஆர்.ஜெ. சுர்ஜேவாலா ஏதோ கூறியதை அடுத்து சித்தராமைய்யாவும் ராகுல் காந்தியும் இணைந்து சிறிது தூரம் ஓடினர்.

75 வயதாகும் சித்தராமைய்யா 52 வயதாகும் ராகுல் காந்திக்கு ஈடுகொடுத்து ஓடியது அங்கிருந்தவர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணத்தில் நாளை ப்ரியங்கா காந்தி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.