காஷ்மீர்; காஷ்மீர் மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு வாட்டும் கடுங்குளிர் மற்றும் மழை காரணமாக, முதல் முறையாக குளிரில் இருந்து தன்னை காத்துக்கொள்ள ரெயின் கோட் அணிந்து யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இன்று 126-வது நாளாக அவரது யாத்திரை நடைபெற்று வருகிறது.

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எழுச்சியூட்டவும், குமரி முதல் காஷ்மீர் வரையிலான 150 நாட்கள் பாத யாத்திரையை ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ந்தேதி  குமரியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கப்பட்ட இந்த யாத்திரையானது பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த  வியாழக்கிழமை (19/01/2023) பஞ்சாப் வழியாக காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைந்தார். அவருக்கு தேசிய மாநாட்டு கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வரவேற்பு அளித்தார்.  கதுவா மாவட்டத்தின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப் மாநிலம் மாதோபூரில் ராகுல் காந்திக்கு பாடல் மற்றும் நடனங்களுக்கு மத்தியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து வரது யாத்திரை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வந்தாலும், இதுவரை வெறும்  டி-சர்ட் மட்டுமே அணிந்து யாத்திரை சென்ற ராகுல் காந்தி, காஷ்மீரில்  நிலவும் கடும் குளிர், பனிப்பொழிவு காரணமாக, முதல் முறையாக இன்று  குளிரை போக்கும் ஜாக்கெட் அணிந்து  யாத்திரை மேற்கொண்டார்.  இன்று காலை முதல்  ஜம்மு முழுவதும் தூறல் மழை பெய்ததால்,இதனால் ராகுல் காந்தி மழை மற்றும் குளிரில் இருந்து  தற்காத்துக் கொள்ள குளிர் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கும் ஆடையை அணிந்தார் என்று கூறப்படுகிறது.

மழை நின்றதும்,  தான் அணிந்து இருந்த  ஜாக்கெட்டைக் கழற்றிவிட்டு,  மீண்டும் வெள்ளை நிற டி-ஷர்ட்டில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. யாத்திரை சத்வாலில் இன்று இரவு நிறுத்தப்படும். நாளை காலை, ஹிராநகரில் இருந்து துகர் ஹவேலி வரையிலும், ஜனவரி 22 அன்று விஜயபூரிலிருந்து சத்வாரி வரையிலும் செல்லும் என திட்டமிடப்பட்டு உள்ளது.

இன்று காலை கதுவாவின் ஹட்லி மோரில் இருந்து மீண்டும் தொடங்கிய யாத்திரைக்கு, ராகுல் காந்தி  மற்றும் அவருடன் யாத்திரையில் பயணிகளுக்கு போலீஸ் மற்றும் துணை ராணுவம் வளைய வேலி அமைத்து, உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜாமர்களும் வைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது சில இடங்களில் நடக்க வேண்டாம் என்று  காந்திக்கு பாதுகாப்பு ஏஜென்சிகள் முன்பு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, 52 வயதான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹாலில் ஜனவரி 25 அன்று தேசியக் கொடியை ஏற்ற உள்ளார், மேலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது ஜனவரி 27 அன்று அனந்த்நாக் வழியாக ஸ்ரீநகருக்குள் நுழையத் திட்டமிடப்பட்டுள்ளது. ராகுலின் யாத்திரை  ஸ்ரீநகரில் ஜனவரி 30 அன்று நிறைவடைகிறது.  அன்று பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும், இதில் கலந்துகொள்ள கூட்டணி கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.