டில்லி

பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை அறிக்கையை  அரசிடம் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  இதற்காக கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இதில் கோவிஷீல்ட் மற்றும், ஸ்புட்னிக் வி ஆகிய மருந்துகள் வெளிநாட்டில் கண்டறியப்பட்டு இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.  கோவாக்சின் இந்தியக் கண்டுபிடிப்பாகும்.

ஏற்கனவே கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி மருந்துகள் மூன்று கட்ட சோதனைகளிலும் வெற்றி பெற்றுள்ளன.  ஆனால் பாரத் பயோடெக் கண்டுபிடித்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட சோதனை முடிவடைந்த நிலையில் அனுமதி பெற்றது.  இதையொட்டி மூன்றாம் கட்ட சோதனைகள் தீவிரமாக்கப்பட்டன.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட சோதனை அறிக்கையை நேற்று இந்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டுக் குழுவிடம் அளித்துள்ளது.   இந்த ஆராய்வு அறிக்கையை கட்டுப்பாட்டுக் குழு விரைவில் ஆய்வு  நடத்தும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.