பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே-வில் கடந்த வாரம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இந்த குண்டுவெடிப்பில் உணவக ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.

பிற்பகலில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய மர்ம நபர் தொடர்பான தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒயிட்பீல்டு அருகில் உள்ள இந்த உணவகத்திற்கு வெவ்வேறு பஸ்களில் மாறிமாறி ஏறி வந்த அந்த மர்ம நபர் குண்டுவைத்துவிட்டு அதேபோல் பல பஸ்கள் மாறி கடைசியாக பெல்லாரி சென்றதாக புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வழியில் தனது உடை மற்றும் அடையாளங்களை மாற்றிய அந்த நபர் விட்டுச் சென்ற தொப்பி முக்கிய தடயமாக சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முக்கிய குற்றவாளி இன்னும் சிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த ஒருவாரம் மூடப்பட்டு இருந்த ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று பரிகார பூஜைகள் நடைபெற்றதை அடுத்து நாளை முதல் வழக்கம் போல் செயல்படும் என்று அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

வழக்கு தொடர்பான சிசிடிவி உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில் மாநில அரசு மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் அனுமதியுடன் நாளை முதல் இயங்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.