னாமா, பெஹ்ரைன்

பெஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய உணவகத்தை ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்ததால் அர்சு மூடி உள்ளது.

பெஹ்ரைன் நாட்டின் தலைநகரான மனாமா நகரில் உள்ள ஆதித்யா என்னும் பகுதியில் லாண்டர்ன்ஸ் என்னும் இந்திய உணவகம் அமைந்துள்ளது.    இந்த உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடை குறித்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.    இதன்படி ஹிஜாப் அணிந்து வந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி பெஹ்ரைன் நாட்டின் சுற்றுலா மற்றும் கண்காட்சி அமைப்பு இந்த உணவகத்தை மூடி உள்ளது.  இது குறித்து  அந்த அமைப்பு, ”இந்திய உணவகமான லாண்டர்ன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு உடைகள் குறித்த கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.  இது அரசின் சமத்துவ கொள்கைகளுக்கு எதிரானது என்பதால் உணவகம் மூடப்படுகிறது” என அறிவித்தது.

இந்நிலையில் அந்த உணவகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “லாண்டர்ன்ஸ் உணவகத்துக்கு அனைவரையும் வரவேற்கிறோம்.  நாங்கள் பெஹ்ரைன் நாட்டில் 35 ஆண்டுகளுக்கும் மேல் அனைத்து நாட்டினருக்கும் சேவை புரிந்து வருகிறோம்.  எங்கள் உணவகம் அனைவரும் குடும்பத்துடன் வரும் இடமாகும்.

எங்கள் உணவக மேலாளர் செய்த தவற்றுக்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.    இதன் மூலம், நாங்கள் யார் என்பதை மக்களுக்கு தெரிவித்துள்ளோம்.  நாங்கள் அவரவர் மத கோட்பாடுகளை மதிக்கிறோம்.   எங்களது உணவகத்தில் வரும் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று இலவசமாக உணவு வழங்குகிறோம்.  அதற்கு அனைவரும் வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.