மும்பை:
பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி தேர்வாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி மற்றும் செயலாளராக ஜெய் ஷா கடந்த 2019ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டனர். இவர்களின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதால் புதிய தலைவர்களுக்கான தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன.

வரும் அக்டோபர் 13ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்டோபர் 14ம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும். தேர்தல் வரும் அக்டோபர் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ உயர் பதவிகளில் 6 வருடங்களுக்கு மேல் இருப்பவர்கள் மீண்டும் போட்டியிட முடியாது என்ற விதி இருந்தது. ஆனால் அந்த முறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததால் கங்குலி மற்றும் ஜெய்ஷா மீண்டும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இது ஒருபுறம் இருக்க, கர்நாடக கிரிக்கெட் வாரிய தலைவரான ரோஜர் பின்னி, பிசிசிஐன் அடுத்த தலைவராக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.