மும்பை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்ட விஷயத்தில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உதவியால் அவருக்கான சிக்கல் நீங்கியுள்ளது.

அவர்மீது காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகார்களின் காரணமாக விசா மறுக்கப்பட்டது. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் தலையிட்டு பிரச்சினையை சரிசெய்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்யும் இந்திய அணி, அமெரிக்காவின் ஃபிளோரிடாவின் லாடர்ஹில் என்ற பகுதியில் இரண்டு டி-20 ஆட்டங்களை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ளது. பின்னர், மேற்கிந்திய தீவுகளில் இதரப் போட்டிகளை முடித்துவிட்டு, அமெரிக்கா வழியாகவே இந்திய அணி நாடு திரும்புகிறது.

இந்நிலையில், ஷமியின் பிரிந்துபோன மனைவியான ஹசின் ஜஹான், வரதட்சிணை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவை தொடர்பாக காவல்துறையில் ஷமி மீது புகார் அளித்திருந்தார். பிரிவு 498A மற்றும் பிரிவு 354A ஆகியவற்றின் கீழ் ஷமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.