mamta-banner
கல்கத்தா,
பேஸ்புக்கில் முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்த மாணவியின் பதிவை  எடுத்து, பிரமாண்ட பேனர் வைத்து மிரட்டி உள்ளது திரிணாமுல் காங்கிரஸ். இந்த செயல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து, ‘பேஸ்புக்’ சமூக வலை தளத்தில், கல்லுாரி மாணவி வெளியிட்ட பதிவை, பிரம்மாண்ட பேனரில் இடம்பெறச் செய்து, மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இம்மாநிலத் தலைநகர் கோல்கட்டாவில், சமீபத்தில், நவராத்தியை முன்னிட்டு, துர்கை சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. ஏராளமானோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை, கோல்கட்டாவின் டம்டம் பகுதியை சேர்ந்த, 21 வயது கல்லுாரி மாணவி, விமர்சனம் செய்து, ‘பேஸ்புக்’கில், பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில்,  ‘மேற்கு வங்கத்தில் வேலையில்லா திண்டாட்டம் நிலவும் சமயத்தில், இதுபோன்ற கொண்டாட்டங்கள் அவசியமா?‘ என, அந்த மாணவி கேள்வி எழுப்பியிருந்தார். 
இதை அறிந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், இதை அப்படியே ஸ்கிரின் ஷாட் எடுத்து, பெரிய பேனராக மாற்றி வைத்திருந்தனர். அதில் அந்த மாணவியை எச்சரித்தும் அச்சிடப்பட்டு இருந்தது.
இதுபற்றி ஏதும் அறியாமல், அந்த மாணவி வழக்கம் போல் வெளியே செல்ல முற்பட்டபோது,  தான் வெளியிட்ட பேஸ்புக் பதிவு, பிரம்மாண்ட பேனரில் இடம்பெற்றிருந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார்.
அதில், ‘கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என, மாணவிக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த சில பெண் தொண்டர்கள், அந்த மாணவியை நேரில் பார்த்து, மோசமான வார்த்தைகளால் திட்டிச் சென்றனர்.
இதனால், மிரண்டு போன அந்த மாணவி, என்ன செய்வதென தெரியாமல் பீதியில் உறைந்து போய் உள்ளார். அந்த மாணவியின் குடும்பமும் செய்தறியாமல் திகைத்துபோய் உள்ளது.
இதுகுறித்து அந்த மாணவி கூறியதாவது:
‘பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தது, இந்தளவுக்கு விபரீதமாக முடியும் என கனவிலும் நினைக்கவில்லை’ என்று அந்த மாணவி தெரிவித்தார்.
இந்த பேனர் விவகாரம் கல்கத்தாவில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.