டெல்லி: வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பி செலுத்தாத தலைமறைவு தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சியிடம் இருந்து ரூ.18,000  கோடி மீட்கப்பட்டு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

விஜய்மல்லைவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடிக்கு மேல் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தற்போது லண்டனில் உள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி, நிரவ் மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்பான மோசடி வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு நிலுவையில் உள்ள அவரும் லண்டனில் உள்ளார்

மற்றோரு வைர வியாபாரியும் நிரவ் மோடியின் உறவினருமான, மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த வழக்கில்   தேடப்பட்டு வருகிறார். அவர் தற்போது கரீபியன் தீவான ஆன்டிகுவாவில் இருக்கிறார். டொமினிகாவிலிருந்து ஜாமீன் பெற்ற பிறகு, இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக தப்பி ஓட முயன்றபோது பிடிபட்டார்.

இவர்கள் மீது பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர்களை இன்னும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் அவர்கள் தங்கியிருக்கும் நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில்  சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டம் தொடர்பான வழக்கு நேற்று (23ந்தேதி) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஅரசு சார்பில் அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்து வாதாடிட்டார்.

அப்போது, “மல்லையா, நீரவ் மோடி, சோக்ஸி ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மதிப்பு  ரூ.67,000 கோடி. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளின் காரணமாக விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து இதுவரை  ரூ.18,000 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

கடந்த டிசம்பர் (2021) மாதம் இதுதொடர்பான கேள்விக்கு பதில் கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , ஜூலை 2021 நிலவரப்படி, விஜய் மல்லையா, நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்களை விற்ற வங்கிகள் ரூ.13,109 கோடியை மீட்டுள்ளன.  இந்த நிலையில், தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோரிடமிருந்து வங்கிகள் ரூ.18,000 கோடியை மீட்டுவிட்டதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா  உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியிடம் பறிமுதல் செய்யப்பட்ட  ரூ. 9,371 கோடி சொத்துக்கள் வங்கிகளிடம் ஒப்படைப்பு!