டில்லி

ணமதிப்பு குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அதிக நேரம் பணி புரிந்த வங்கி ஊழியர்கள், ஓ டி தொகை தராததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூ நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார்.  அப்போது வங்கி ஊழியர்கள் அதிக நேரமும், இரவு நேரங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் பணி புரிந்தனர்.  இதன் மூலம் மக்கள் தங்களிடம் இருந்த செல்லாத நோட்டுக்களை மாற்றிச் சென்றனர்.

இவ்வாறு அதிக நேரமும், விடுமுறை நாட்களும் பணி புரிந்ததற்காக கூடுதல் தொகை வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.  இதனால் வங்கி ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் இது குறித்து தெரிவிக்கையில், “வங்கி ஊழியர்கள் அதிக நேரம் பணி புரிவதற்கான இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்கப்படும் என்பதால் தான் வங்கி ஊழியர்கள் இரவு பகலாக வார விடுமுறை நாட்களிலும் பணி புரிந்தனர்.  ஆனால் இது வரை எந்த வங்கியும் தொகையை வழங்கவில்லை.   ஒரு சில வங்கிகளில் பெயருக்கு ஒரு சிறு தொகை வழங்கப்பட்டது.

இது குறித்து சட்ட ஆலோசனைகளை நாங்கள் கேட்டுள்ளோம்.   எங்களுக்கு வர வேண்டிய தொகை வரவில்லை எனில் நாங்கள் வேலை நிறுத்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.  அரசின் இந்த நடவடிக்கையால் பல வங்கி ஊழியர்கள் மீது மக்கள் தேவையற்ற கோபம் அடைந்தனர்.  ஆனால் வங்கி நிர்வாகம் எங்களுக்கு வர வேண்டிய தொகையையும் தராமல் இழுத்தடிக்கிறது” எனக் கூறி உள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அருன் ஷோரி பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை என்பது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கை ஆகி விட்டது என விமர்சித்தது குறிப்பிடத் தக்கது.