டில்லி

நாடெங்கும் இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

மத்திய அரசு தனது நிதி நிலை அறிக்கையில் வங்கிகள் குறித்து பல புதிய திருத்தங்களை அறிவித்தது.   இதற்கு நாடெங்கும் உள்ள வங்கி ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.  இந்த திருத்தங்கள் மூலம் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாகும் என வங்கி ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.

எனவே இந்த திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தனர்.   மத்திய அரசு வங்கி ஊழியர்களுடன் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்ததை அடுத்து இன்றும் நாளையும் நாடெங்கும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

இந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.   இந்த வங்கிகள் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டுவதாகவும் இது ஜனநாயக விரோதச் செயல் என்றும் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் இந்த 2 நாட்கள் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் பாதிப்பு அடைய வாய்ப்புள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.