கொரோனா பரவலை தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், 2020 மே மாதம் முதல் இதுவரை வெளிநாடுகளில் வேலை பார்த்துவந்த 5.52 லட்சம் பேர் வேலை இழந்து கேரளா திரும்பியுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

தொற்றுநோயை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை இழப்பு அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள இந்தியத் தொழிலாளர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

கேரள அரசின், அயல்நாடு வாழ் கேரள மாநிலத்தவர் விவகாரங்களை கவனிக்கும் துறையில், தாயகம் திரும்பியவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, கேரளாவில் தான் அதிக எண்ணிக்கையிலானோர் நாடு திரும்பியுள்ளனர்.

மே 2020 முதல் 2021 ஜனவரி 4 வரை கிட்டத்தட்ட 8.43 லட்சம் பேர் கேரளா திரும்பியுள்ளனர். அவர்களில், கடந்த 30 நாட்களில் மட்டும் 1.40 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

சுமார் 2.08 லட்சம் பேர் தங்கள் விசா, ஒர்க் பெர்மிட் போன்றவை காலாவதியானதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் கடந்த ஆண்டு 6.09 லட்சம் கோடி ரூபாயில் இருந்தது இந்த ஆண்டு 4.7 லட்சம் கோடி ரூபாயாக சரியும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது, இதனால் வங்கிகள் 23 சதவீத இழப்பை சந்திக்க நேரிடும்.

இருப்பினும், மாநிலத்தின் வங்கித் துறையில் என்.ஆர்.ஐ வைப்புத்தொகை அதிகரித்து வருவதோடு பணம் அனுப்புவதிலும் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்த சர்வதேச புலம்பெயர்ந்தோர் குறித்த நிபுணர் ஒருவர், இந்த மாற்றம் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறினார்.

கேரளாவின் வங்கித் துறையில் என்.ஆர்.ஐ வைப்புகளில் 29% பங்கைக் கொண்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், என்.ஆர்.ஐ.க்கள் செய்த வைப்புகளில் நிலையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

“ஒவ்வொரு மாதமும், எஸ்பிஐயில் என்ஆர்ஐ வைப்பு ரூ .300 கோடி அதிகரித்துள்ளது” என்று எஸ்பிஐயின் ஏஜிஎம் (என்ஆர்ஐ செல்) அஜய் குமார் கூறினார்.

அஜய் குமாரின் தகவலின் அடிப்படையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை வைத்து பார்க்கும் போது, டிசம்பர் மாதம் முதல் என்.ஆர்.ஐ. டெபாசிட்டுகளில் வீழ்ச்சியடைந்துள்ளது.

குவைத்தில், கொரோனா பரவலுக்கு பின் ஏற்பட்ட எண்ணெய் உற்பத்தி நிறுத்தத்தால், வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டதை தொடர்ந்து 8 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்க நேரிட்டது. குவைத்தில் சுமார் பத்து லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர் அதில் 70 சதவீதம் கேரளாவை சேர்ந்தவர்கள், இதனால் பணபரிமாற்றத்தில் கணிசமான பாதிப்பு ஏற்பட்டதோடு, அவர்களின் எதிர்கால தேவைக்கான சேமிப்பும் குறைந்தது.

வேலை இழந்து நாடு திரும்பும் கேரளத்தவரை மீள் குடியமர்த்தவும், அவர்கள் புதிய தொழில் தொடங்கவும் 30 லட்சமும் ரூபாய் வரை நிதி உதவி திட்டம், மானியக் கடன்கள் உள்ளிட்ட திட்டங்களை மாநில அரசு நிறுவனமான நோர்கா-ரூட்ஸ் செயல்படுத்தி வருவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் நம்பூதிரி சமீபத்தில் தெரிவித்தார்.

பொருளாதார சரிவு காரணமாக இந்தியாவிலும் வேலை இழப்பு அதிகரித்து வருவதாகவும், இதுவரை 68 லட்சத்திற்கும் அதிகமான தினக்கூலிகள் வேலை இழந்திருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.