டில்லி,
புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கவே நாடு முழுவதும் வங்கிகளும், ஏடிஎம் சென்டர்களும் மூடப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து,  டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,
நவம்பர் 10-ந் தேதி முதல் நாடு முழுவதும் புதிய ரூ 500, ரூ 2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டின் உண்மையான வளர்ச்சி ஏற்படும்.
மத்திய அரசின் புதிய நடவடிக்கைக்கு ரிசர்வ் பேங்க் ஒப்புதல் அளித்துள்ளது.
உயர் மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை ரொக்கமாக செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளடைவில் இந்த நடவடிக்கை நாட்டு நலனுக்கு உதவும் எனக் கூறினார்.
new-currnecy
கூடுதல் பாதுகாப்புடன் மற்ற நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும், ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்வதற்காக கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கள்ள நோட்டு, கருப்பு பண புழக்கத்தை தடுக்கவே 1000, 500 ரூபாய் நோட்டுக்கள்  நள்ளிரவு முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பு மத்திய அரசு வட்டாரத்தில் சிலருக்கு மட்டுமே தெரியும்.
போதிய அளவில் மாற்று நோட்டுக்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளுக்கு கொண்டு செல்வதற்காகவே நாளை நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், வங்கிகள், கருவூலங்களும் நாளை மூடப்படும் எனவும் அனைத்து வங்கிகளும் 24 மணிநேரமும் சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்றார்.
இதனிடையே பொதுமக்கள் சந்தேகங்களை தீர்க்க 011 – 23093230 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.