வெலிங்டன்: வங்கதேச அணிக்கெதிரான முதல் டி-20 போட்டியில், நியூசிலாந்து அணி 66 ரன்களில் வென்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர் கப்தில் 35 ரன்கள் எடுத்த அவுட்டாக, கான்வே 52 பந்துகளில் 92 ரன்களை விளாசினார்.

வில் யங், 30 பந்துகளில் 53 ரன்களை விளாசினார். பிலிப்ஸ் 10 ரன்களில் 24 ரன்களை எடுக்க, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நியூசிலாந்து 210 ரன்களைக் குவித்தது.

இதன்பிறகு சவாலான இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் துவக்க வீரர் நெய்ம் 27 ரன்களுக்கு அவுட்டானார். ஆபிப் ஹொசேன் 33 பந்துகளில் 45 ரன்களையும், சபிவுதீன் 34 பந்துகளில் 34 ரன்களையும் அடித்தனர்.

வேறு யாரும் தேவையான ஆட்டத்தை ஆடவில்லை. பலரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இறுதியில், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்து, 66 ரன்களில் தோற்றது வங்கதேச அணி.

நியூசிலாந்து சார்பில் சோதி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதற்கு முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை, வங்கதேசம் முழுவதுமாக இழந்தது குறிப்பிடத்தக்கது.