செளதாம்ப்டன்: வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் இடையிலான போட்டியில், வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற ஆஃப்கன் அணி முதலில் வங்கதேசத்தை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. அதன்படி களமிறங்கிய வங்கதேசத்தின் துவக்க ஜோடிகள் பெரிதாக ஆடவில்லை என்றாலும், ஷாகிப் அல் ஹசன் 51 ரன்களும், ரஹீம் 83 ரன்களும் அடித்தனர்.

தமீம் இக்பால் மற்றும் மொசாதிக் ஹொசேன் ஆகியோர் முறையே 36 மற்றும் 35 ரன்களை சேர்க்க, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 262 ரன்கள் எடுத்தது.

ஆஃப்கன் தரப்பில் முஜிபுர் ரஹ்மான் அதிரடியாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 10 ஓவர்களில் அவர் வழங்கிய ரன்கள் 39 மட்டுமே.

பின்னர், வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி, ஒரு கட்டம் வரை நம்பிக்கையூட்டினாலும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் குல்பதீன் நெய்ப் 47 ரன்களும், ‍ஷென்வாரி 49 ரன்களும் எடுத்தனர்.

அந்த அணியின் மற்ற வீரர்கள் எவரும் 30 ரன்களைக்கூட தொடவில்லை. ஆஃப்கன் அணியின் 3 வீரர்கள் டக் அவுட். மொத்தமாக 200 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது ஆஃப்கானிஸ்தான் அணி. வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் சிறப்பாக பந்துவீசி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.