பெங்களூரு

ர்நாடகாவில் உள்ள நம்ம மெட்ரோ அதிகாரிகளுக்கு கன்னடம் பயிற்றுவிக்கப் படுகிறது.

கடந்த திங்கட் கிழமை மதியம் சுமார் 50 மூத்த பெங்களூரு மெட்ரோ ரெயில் அதிகாரிகள்  சாந்தி நகரில் உள்ள பெங்களூரு மெட்ரோ ரெயில் கார்போரேஷன் அலுவலகத்தில் உள்ள கான்ஃபரென்ஸ் அறையில் குவிந்தனர்.    அனவருக்கும் ஏதோ முக்கியமான  தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம் என சந்தேகம் இருந்தது.   பிறகு அந்த அறையில் நுழைந்த இளைஞர் ஒருவர்  “அனைவரும் உங்கள் கன்னட வீட்டுப் பாடங்களை முடித்தீர்களா?” என கேட்டார்,   ஆச்சரியம்தான் .   ஆனால் உண்மை.

பொறியாளர்கள், தொழில்நுட்ப தலைவர்கள், மற்றும் மேலாளர்கள் என அங்கிருந்த  பலரும் தற்போது கன்னடம் கற்கும் மாணவர்களே ஆவார்கள்.   கர்நாடக மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ஆன தோகே என்பவர் தற்போது கன்னடர் அல்லாத அனைத்து மெட்ரோ அதிகாரிகளுக்கும் கன்னடம் பயிற்றுவிக்கும் திட்டம் அறிமுகப் படுத்தி உள்ளார்.   இதுவரை ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு கன்னடத்தில் பேச,  எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கப் பட்டு வருகிறது.

இது குறித்து தோகே கூறுகையில், “மெட்ரோ ரெயில் நிறுவனம் மாநில மற்றும் மத்திய அரசின் சரி பாதி பங்குடன் நடைபெறுகிறது.   அதாவது மெட்ரோவில் பணிபுரியும் அதிகாரிகளில் பாதி பேர் கன்னடம் பேசாத மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.   அவர்களுக்கு உள்ளூர் மொழியான கன்னடத்தில் திறன் உண்டாக வேண்டும்.  அத்துடன் மெட்ரோவில் பயணம் செய்யும் கீழ் மட்ட  தொழிலாளர்களுடனும் இந்த அதிகாரிகள் கலந்துரையாட வேண்டி உள்ளதால் கன்னடம் கற்பது அவசியத்தேவையாக உள்ளது.” எனக் கூறி உள்ளார்.

இது குறித்து பெங்களூரு மெட்ரோ ஊழியர் ஒருவர், “எங்களின் பயிற்சியாளர் கன்னட மொழியின் அடிப்படைகளைப் பற்றி ஒன்பது வகுப்புக்களில் புரிய வைத்துள்ளார்.  ஆனால் நாங்கள் இன்னும் மொழியைக் கற்க விரும்புகிறோம்/    நாங்கள் இந்த மொழியை பேச மட்டும் இன்றி எழுதப் படிக்கவும் கற்றுக் கொண்டுள்ளோம்” என கூறி உள்ளார்.