சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் வரும் 5ந்தேதி தமிழகத்தில் முழு அடைப்பு (பந்த்) போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.
இந்த போராட்டத்தில் தமிழக அரசின் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் என அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அன்று பஸ் போக்குவரத்து நடைபெறுவது சந்தேகம் என கூறப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி இன்று அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் வணிகர் சங்கங்களும் கடை அடைப்பு நடத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 5-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்களிடம் இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கார், ஆட்டோ சங்கத்தினரும் போராட்டத்தில் கலந்துகொள்வது குறித்து விரைவில் அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 5ந்தேதி முழு அடைப்பு போராட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளன. போக்குவரத்து சங்கங்களின் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தின் எடுக்கப்பட்ட முடிவின்படி, தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 15 போக்குவரத்து சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளன.
இதன் காரணமாக அன்று தமிழகம் முழுவதும் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என தெரிகிறது.