சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், தற்போது பரவி வரும் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா காரணமாக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று இரவு, நாளை, நாளை மறுநாள் ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகஅரசும்,  ங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.

அரசின் உத்தவை  மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு  வழக்கமாக தமிழகத்தில் மெரினா பீச் உள்பட பல இடங்கள் களைகட்டும். ஆனால்,   இந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி மதுபான பார்களை நாளை இரவு 10 மணியுடன் மூட காவல்துறை உத்தரவுவிட்டுள்ளது. அந்த வகையில், மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் நாளை இரவு 10 மணியுடன் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளை மீறும் கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது.

அதேபோல் சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பைக் ரேஸ் மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாக சென்னையிலுள்ள மேம்பாலங்கள் நாளை இரவு மூடப்படும் என்றும் உணவகங்கள் 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதியில்லை என்று ம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 300 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபடவுள்ளனர்.

இதனால், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், தேவைப்படும்பட்சத்தில் இன்று இரவு, நாளை, நாளை மறுநாள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கண்காணிப்பை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.