திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா அன்று பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டிசம்பர் 2ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது. இந்த விழா வரும் 23ம்ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கோவிலில் பல்வேறு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ தீபத் திருவிழாவை முன்னிட்டு மேலும் 14 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. கிரிவலம் செல்லும் பெண்கள், முதியோர்கள், குழந்தைகளுக்காக தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலம் செல்லும் பாதைக்கு செல்வதற்கு இலவச சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

தீபத்திருவிழாவின் போது மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலையில் மருத்துவ வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. எனவே, திருவிழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மலையேற பக்தர்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் மலைப்பாதைகளும் மூடப்பட உள்ளன.

திருவிழாவில் 9 ஆயிரத்து 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வனத்துறை சார்பில் 250க்கும் மேற்பட்டோர் ஈடுபடவுள்ளனர்’’ என்றார்.

தீப திருவிழா அன்று பகலில் மலை ஏறும் பக்தர்கள் மாலை மகா தீபம் ஏற்று வரை மலையில் இருக்கின்றனர். தீபம் ஏற்றிய பிறகு மலையில் இருந்து கீழே இறந்க தொடங்குகின்றனர்.

அந்த சமயம் இருள் சூழந்துவிடுவதால் வழியை கண்டுபிடிக்க வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே மரங்களை தீ வைத்து எரித்து விடுகின்றனர். தீ பரவி மலை மீதுள்ள பெரும் வனப்பகுதியை நாசமாக்கி விடுகிறது. இதை தவிர்ப்பதற்காக பக்தர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டிருப்பதாக கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.