சென்னை: இன்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இரவு பேருந்துகள் இயங்காது என்று நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பேருந்துகள் சேவை நிறுத்தப்படாது., வழக்கம்போல் இயங்கும் என போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்படும் என தெரிவித்து உள்ளது.

அதுபோல் ஆம்னி பேருந்து சேவை வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ்புயல் சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வரும் இந்த புயலானது, இன்று நள்ளிரவு மாம்மல்புரம் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது 65 கிமீ முதல் 85 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால்,  சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர்,  விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று இரவு பேருந்து சேவை அளிக்கக்கூடாது என்றும் பேருந்து நிலையங்களில் கூட்டமாக மக்கள் யாரும் நிக்க கூடாது என்று நேற்று  மாலை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 16மணி நேரத்தில், இந்த அறிவிப்பு மாற்றப்பட்டு உள்ளது. சென்னை உள்பட எந்த மாவட்டத்திலும் இன்றிரவு பேருந்துகள் நிறுத்தப்படாது என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. 6 மாவட்டங்களில் பேருந்து நிறுத்தம் என தகவல் வெளியான நிலையில் போக்குவரத்து துறை விளக்கம் தெரிவித்துள்ளது.

புயல் பாதிப்பு இருக்கும் இடங்களில் மட்டுமே அந்த நேரத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும். மாண்டஸ் புயல் எதிரொலியால், சென்னையில் கடலை ஒட்டிய, கிழக்கு கடற்கரை சாலையில் மட்டுமே இரவில் பேருந்துகள் இயங்காது எனவும் கூறியுள்ளது.

ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம் போல் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.