பாலமுருகன் கோயில் ஆற்காட்டிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் உள்ள முருகன் குழந்தை வடிவில் பாலமுருகனாய் காட்சி தருகிறார். குன்றிருக்கும் இடமெல்லாம் முருகன் இருப்பான் என்ற முதுமொழிக்கு ஏற்ப இக்கோயில் ஒரு சிறிய குன்றின்மேல் அமைந்துள்ளது. இத்தலத்து முருகனுக்கு பூஜையின் போது மலர்கள், நெய்வேத்தியம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் இவை அனைத்தும் ஆறு என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே நாளில் முருகனுக்கும் அன்னாபிஷேகம் செய்வது இந்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மட்டுமே. சிவனிலிருந்து தோன்றிய சிவ அம்சமாதலால் முருகனுக்கும் அன்னாபிஷேகம் செய்கின்றனர்.

ஆடி கிருத்திகை அன்று முருகன் ஊர் பெயருக்கேற்ப ரத்தினங்களால் ஆன ஆடை அணிந்து காட்சி தருவது சிறப்பாகும். முருகன் இங்கு பால வடிவில் இருப்பதால் கந்த சஷ்டியன்று சூரசம்ஹாரம் நடப்பதில்லை. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் இது என்பது இத்தலத்தின் மேலும் ஒரு சிறப்பாகும்.

இத்தலத்தில் உள்ள வராஹி அம்மனை வளர்பிறை பஞ்சமியில், வாழை இலையில் அரிசி, தேங்காய், வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபமேற்றி வேண்டினால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.