balamurasi-bodyfull
சென்னை,
நேற்று மரணமடைந்த பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகின்றன.
86 வயதான பாலமுரளி கிருஷ்ணா வயோதிகம் காரணமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.
‘மங்களம்பள்ளி பால முரளிகிருஷ்ணா’ என அழைக்கப்படும், முரளி கிருஷ்ணா, 1930ல், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், சங்கரகுப்பம் கிராமத்தில் பிறந்தார். கர்நாடக சங்கீதத்தின் மீது கொண்ட அதீத பிரியத்தின் காரணமாக, 6 வயது முதல் பாடத் தொடங்கிய பால முரளிகிருஷ்ணா புது புது ராகங்களை உருவாக்கி இசையுலகில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்து புகழ்பெற்றவர்.
சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது, சிறந்த இசையமைப்பாளருக்காக தேசிய விருது, சுவாதித் திருநாள் விருது, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, சங்கீத கலாசாரதி, செவாலியே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் என பல்வேறு விருதுகளுக்கும், பட்டங்களுக்கும் பெற்றவர் டாக்டர் பால முரளி கிருஷ்ணா.
இவரது 75-வது பிறந்த நாள் விழாவில், அவருக்கு  தமிழக அரசு சார்பில் “கந்தர்வ கான சாம்ராட்” என்ற கவுரவ பட்டம் வழங்கப்பட்டது.
இசையுலகில் ஈடு செய்ய முடியாத பால முரளிகிருஷ்ணாவின் மறைவுக்கு திரையுலகத்தினரும், இசை கலைஞர்களும், அரசியல்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தற்போது பால கிருஷ்ணாவின் உடல் மியூசிக் அகாடமி அருகே உள்ள  ராதாகிருஷ்ணன் சாலை அருகில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஏராளமான முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
பிற்பகல் 2.30 மணிக்கு ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து  புறப்படும் இறுதி ஊர்வலம் மயிலாப்பூர், மந்தை வெளி, அடையாறு வழியாக மாலை 4 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானம் வந்தடையும்.
மாலை 4 மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் அவரது குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.