டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றிருந்த 49 பேரில் 17 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர்.

எஞ்சிய 32 பேரில் 26 பேர் லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 6 பேர் காணொளி மூலம் ஆஜராகினர்.

குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கவில்லை என்று கூறி 32 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனச் சட்டத்திற்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எதிரானது.

பாபர் மசூதி இடிப்பு சட்டவிரோமானது என்று உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு ஏற்கெனவே உறுதி செய்தது. எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றார்.