டெல்லி:

பதஞ்சலி என்ற ஆயுர்வேத நிறுவனத்தை யோகா பாபா ராம்தேவ் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

இதற்கான விளம்பரத்துக்கு பல்வேறு யுக்திகளை அவர் கையாண்டு வருகிறார். விளம்பரத்தில் கூறுவது ஒன்று..நிஜத்தில் இருப்பது வேறு.. என்று கூறி சமீபத்தில் இவரது நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.

இந்நிலையில் இந்த நிறுவனம் சார்பில் மல்யுத்த லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. பதஞ்சலி நிறுவனத்தின் பவர் வீட்டாவை விளம்பரம் செய்யும் வகையில் நடைபெறும் இந்த போட்டியின் இரண்டாவது அரை இறுதி போட்டி நேற்று நடந்தது.

இதற்கு முன்னதாக நட்பு ரீதியான போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது. இதில் ஐரோப்பா உக்ரைன் நாட்டு வீரரான ஆண்ட்ரி ஸ்டட்னிக் (34 வயது) என்பவருக்கும் ராம்தேவுக்கும் இடையில் போட்டி நடந்தது.

ஆர்வத்துடன் தரை தொட்டு கும்பிட்டு விட்டு களத்துக்கு வந்த ராம்தேவ், யோகா பயிற்சியை மேற்கொண்டு போட்டிக்கு தயாரானார். பல நுட்பங்களை பயன்படுத்தி ஆண்டரி ஸ்டட்னிக்கை நிலை குலைய செய்தார். இறுதியில் 12:0 என்ற கணக்கில் ராம்தேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வீரர் 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாரை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கம் பெற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரருக்கு வெங்கலப் பதக்கம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.