லக்னோ: இந்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு, பாகிஸ்தான் தரப்பில் எதற்காக இறுதிச் சடங்குகள் நடத்தப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஆஸம்கான்.

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; புலவாமா சம்பவத்தையடுத்து, இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் பகுதிக்குள் 300 நபர்கள் வரை மாண்டுபேயினர் என பாரதீய ஜனதா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அப்படி இறந்தவர்களுக்கு எதற்காக இறுதிச் சடங்குகளை பாகிஸ்தான் தரப்பில் நடத்தவில்லை என்று நான் பாகிஸ்தான் அரசை கேள்வி கேட்க விரும்புகிறேன்.

ஏனெனில், அத்தனை நபர்கள் அங்கே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கான இறுதிச் சடங்கு நடைபெற்றிருக்க வேண்டுமல்லவா!

இந்த விஷயத்தில் நான் இந்திய அரசிடம் எதையும் கேட்க விரும்பவில்லை. மேலும், என்னைப் பொறுத்தவரை, புலவாமா விஷயத்தில் பதிலடி கொடுக்க, நமது அரசாங்கம் அதிகநேரம் எடுத்துக்கொண்டது என்பதே என் கருத்து.

ஒருவேளை நான் பிரதமர் பதவியில் இருந்திருந்தால், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்திருக்க, 40 விநாடிகளுக்கு மேல் பிடித்திருக்காது” என்றார்.

– மதுரை மாயாண்டி