டில்லி

ர்ச்சைக்குரிய அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில், மத்தியஸ்தர் குழுவினர், இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், இன்றைய விசாரணையை தொடர்ந்து, ஆகஸ்டு 1-ம் தேதி அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி  விவகாரம் தொடர்பான மேல்முறையீடு வழக்குகள்  உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையை தொடர்ந்து, முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி எம்.எம்.ஐ. கலிபுல்லா தலைமை யில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரைக் கொண்ட மத்தியஸ்தர்கள் குழு அமைக்கப்பட்டு அவர்களை கொண்டு தனியாக விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்த குழுவினரின் முதல்கட்ட விசாரணை அறிக்கையில் முன்னேற்றம் இருந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்டு 15ந்தேதி வரை அவகாசம் வழங்கியது உச்சநீதி மன்றம்.

இதற்கிடையில், வழக்கு தொடர்ந்த,  இந்து அமைப்பு ஒன்று, மத்தியஸ்தர் குழுவினரின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்று கூறியதை தொடர்ந்து, உச்சநீதி மன்றம், இடைக்கால அறிக்கையை அளிக்கும்படி மத்தியஸ்தர் குழுவினருக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் அயோத்தி வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஸ்த குழுவின் பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலை குறித்த அம்சங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  மேலும், ஆகஸ்டு 1ந்தேதி வரை அவகாசம் கோரியது.

இதையடுத்து, ஆகஸ்டு 1ந்தேதி வரை அவகாசம் வழங்கிய உச்சநீதி மன்றம் வழக்கை ஒத்தி வைத்து.